Our Feeds


Sunday, April 26, 2026

SHAHNI RAMEES

1.1 பில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் இலங்கையை சேர்ந்த 22 பௌத்த துறவிகள் கைது!

 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும்

அதிக பெறுமதியுடைய பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், 22 பௌத்த மதகுருமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களுக்கமைய, சனிக்கிழமை இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.



பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு இனிப்புப் பண்டங்கள் பொதி செய்யப்பட்டிருந்த இரட்டை அடிப்பகுதிகளைக் கொண்ட பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிகமான குஷ் (Kush) மற்றும் ஹாஷிஷ் (Hashish) என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஒவ்வொரு மதகுருவும் தலா ஐந்து கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருளைத் தமது பயணப் பொதிகளில் கொண்டு சென்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



மேலும், இந்த குழுவினர் ஏப்ரல் 22 ஆம் திகதி ஸ்பான்சர் ஒருவரால் வழங்கப்பட்ட விமானப்பயணச் சீட்டுக்கள் மூலம் பேங்காக் சென்றிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 


அவர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சிவில் உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களது கைபேசிகளில் இருந்து ஆதாரங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



இது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகக் கருதப்படுவதுடன், பாரிய போதைப்பொருள் கடத்தலில் மதகுருமார் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் பதிவாகியுள்ளது.



நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடரும் இளம் மதகுருமார் என்றும் கூறப்படும் இந்த சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »