Our Feeds


Saturday, April 25, 2026

Zameera

ஜப்பானில் கடுமையான காட்டுத்தீ : 2,500 பேர் அவசரமாக வெளியேற்றம்


 (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )


ஜப்பானின் இவாதே மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


இவாதே மாகாணத்தின் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இந்த காட்டுத் தீ, அருகிலுள்ள ஓட்சுச்சி நகரை நோக்கி வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


தீ பரவல் தீவிரமடைந்த நிலையில், அப்பகுதி மக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நகர நிர்வாகம் உடனடி வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.


இந்த காட்டுத்தீயால் இதுவரை 2,700 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், குறைந்தது 8 கட்டிடங்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். தரை மற்றும் வான்வழி நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு தீ அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


தீ பரவலை கட்டுப்படுத்துவதில் வானிலை நிலைமைகளும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றது. பலத்த காற்று மற்றும் உலர்ந்த சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இந்நிலையில், மேலும் பல பகுதிகளுக்கு தீ பரவ வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »