பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று (24.02.2021) கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹொட்டலில் பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். ஊழலற்ற நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட ஜனநாயக விழுமிய ஆட்சி ஆகியனவற்றுக்கு பாகிஸ்தான் பிரதமராகிய நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பது போலவே, ஐக்கிய மக்கள் சக்தியும் அதற்கு முக்கியத்துவம் வழங்குகிறது என இதன் போது சஜித் பிரேமதாச தொரிவித்தார்.
குறுகிய காலத்தில் நாம் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறுகிற போதிலும், இது மிகுந்த பயனை தரும் என நம்புகிறேன் என சஜித் பிரேமதாசா இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.
கோவிட் வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கும் உடல்களை சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீர்வுகளையும், உள்நாட்டில் நியமிக்கப்பட்ட விஷேட நிபுனர் குழுவின் அறிக்கைகளின் தீர்வுகளின் பிரகாரம், இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்கள் பாரபட்சமின்றி நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென்பதே தமதும், தமது கட்சியினதும் எதிர்பார்ப்பு எனவும் இதன்போது சஜித் பிரேமதாச தொரிவித்தார். இவற்றையெல்லாம் செவி மடுத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர், சஜித்துடனான தமது சந்திப்பு குறித்து மகிழ்வடைவதாகவும், எதிர்காலத்தில் மேலும் இணைந்து செயற்பட தாம் ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
