நுவரெலிய மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஜே.ஸ்ரீரங்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, கிழக்கு மாகாணத்தில் தனது அரசியலை தொடர்வதற்கு ஜே.ஸ்ரீரங்கா தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஜே.ஸ்ரீரங்கா, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று, கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை ஊடக அமையத்தில் அண்மையில் ஜே.ஸ்ரீரங்கா, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து, பிரத்தியேக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே, தனது அரசியல் பயணத்தை கிழக்கில் தொடரவுள்ளமை குறித்த கருத்து வெளி வந்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஜே.ஸ்ரீரங்காவிற்கு சொந்தமானது என கூறப்படும் தமிழ் பத்திரிகை ஒன்று தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஊடகவியலாளர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், பத்திரிகைக்கு மேலதிகமாக அரசியல் விவகாரங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
