இந்தியா சுதந்திரமடைந்ததன் பின்னர், முதல் முறையாக பெண்ணொருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் சத்தியம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணுக்கே இவ்வாறு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
ஷப்னம் என்ற பெண்ணின் கருணை மனுவை, ஆளுநர் ஏற்கனவே நிராகரித்திருந்த நிலையில், இறுதியாக அந்த கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதியும் அந்த கருணை மனுவை நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஷப்னம் என்ற பெண்ணை தூக்கில் இடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சத்தியம் தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.
தனது காதலுடன் இணைந்து வாழ்வதற்காக 2008ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை ஷப்னம் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
தனது தாய், தந்தை, இரு சகோதரர்கள், சகோதரர்களில் மனைவிமார் மற்றும் சிறு குழந்தை ஆகியோரை ஷப்னம் கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில், விசாரணைகளின் போது, குடும்ப அங்கத்தவர்களுக்கு பாலில் மயக்க மருந்து வைத்து வழங்கியதுடன், பின்னர் அவர்களை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
வெளி ஆட்கள் தமது குடும்பத்தாரை கொலை செய்து விட்டதாக ஷப்னம் முதலில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்னர், இந்த கொலையை தானே நடத்தியதாக ஷப்னம் விசாரணைகளின் போது ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகள் அம்ரோ மாவட்ட விசேட நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளில் 2010ம் ஆண்டு ஷப்னம் மற்றும் அவரது காதலன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
அம்ரோ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்தே, ஷப்னம் கருணை மனுவை விண்ணப்பித்துள்ள போதிலும், ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கருணை மனுவை நிராகரித்துள்ளனர்.
இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளமையினால், தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடமாக மதுரா சிறைச்சாலை காணப்படுகின்றது.
தூக்கு கயிறு கொள்வனவிற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தூக்கு தண்டனை உறுதியாகியுள்ள போதிலும், அதற்கான திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சத்தியம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெண்ணொருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Sathiyam TV)
