Our Feeds


Friday, March 26, 2021

www.shortnews.lk

04/21 தாக்குதல் பற்றி அதிகாரிகள் உரிய முறையில் தெரிவித்திருந்தால் எப்படியும் தடுத்திருப்பேன் - முன்னால் ஜனாதிபதி

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் தனக்கு உரிய வகையில் அறிவித்திருந்தால் தாக்குதலை எந்தவழியிலாவது தடுத்திருப்பேன் என முன்னாள் ஜனாதிபதியும் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


யுத்த காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. அவை பயங்கரவாத தாக்குதல்கள் என்பதனால் அதிகாரிகளுக்கு அதில் பொறுப்புக் கூறல் இருக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அதேபோன்றதே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சிலர் என்னை இந்த விவாதத்தில் கதைக்க வேண்டாம் என்றும் சிலர் கதைக்குமாறும் கூறினர். ஆனால் நான் எனது மனசாட்சிக்கு அமைய இங்கு சில விடயங்களை கூறியாக வேண்டும். என்னைப் பற்றி மக்கள் மயமாகியுள்ள கருத்துக்கள் என்ன என்பதனை நான் அறிவேன். நானே அமைத்த அமைச்சரவையின் அமைச்சர் ஒருவர் தாக்குதல் நடக்க முன்னர் ஜனாதிபதி அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த தாக்குதல் தொடர்பாக தகவல்களை அறிந்து நான் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். எனது அரசியல் வாழ்க்கை 53 வருடங்களை கடந்துள்ளது. இந்த காலப்பகுதியில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளிட்டவற்றுக்கு முகம்கொடுத்துள்ளேன். கொலை முயற்சிகளில் இருந்தும் நான் தப்பியுள்ளேன்.

ஆனால் சமூகத்தில் ஏற்படும் நிலைமையில் பொய்யை தொடர்ந்தும் கூறிக்கொண்டிருந்தால் அது உண்மையாகும் என்ற அறிஞர்களின் கருத்துக்களை போன்றே என்மீது குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

இந்த சபையில் முழு அறிக்கையையும் வாசித்த யாரும் இல்லை என்றே நினைக்கின்றேன். அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்காது யாருக்கும் ஏதேனும் முடிவுக்கு வந்துவிட முடியாது.

நாங்கள் யுத்த காலத்தில் குண்டுகள் வெடித்தன. பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பலர் கொல்லப்பட்டுள்ளனர்.இராணுவத் தளபதி மீதும் குண்டுதாக்குதல் நடத்தப்பட்டது. யுத்த காலத்தில் நடந்த சம்பவங்களை பார்க்கும் போது பொறுப்புக் கூறல் தொடர்பாக குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அது பயங்கரவாத தாக்குதல் என்பதனால் அதனை செய்ய முடியாது. அதேபோன்ற பயங்கரவாத தாக்குதலே ஏப்ரல் 21இல் நடந்துள்ளது.

நான் 2015இல் ஜனாதிபதியான போது அரசாங்கத்தில் ஒரு பகுதியினரே எனக்கு ஒத்துழைப்பு வழங்கினர். பெரும்பான்மை ஆதரவு இன்றி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலேயே நான் பணியாற்றினேன். எவ்வாறாயினும் தேசியப் பாதுகாப்பை பலவீனமடைவதற்கு ஒருபோதும் இடமளிக்கவில்லை.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக சகல தீர்மானங்களையும் எடுத்தோம். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலத்தில் உலகம் பூராகவும் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த தாக்குதல்கள் காரணமாக தேசிய பாதுகாப்பு சபையில் தொடர்ச்சியாக நாங்கள் இங்கு அந்த தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கதைத்துள்ளேன்.

எவ்வாறாயினும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக அதற்கு முன்னர் புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த நிலையில், அந்த தகவல் புலனாய்வு அதிகாரிகளுக்கிடையே பகிரப்பட்டிருந்த போதும், தாக்குதல் நடந்து முடியும் வரையில் தனக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த சம்பவத்தின் போது வெளிநாட்டில் வைத்தியசாலையொன்றில் இருந்தேன். அப்போது அதிகாரிகள் யாருக்கும் என்னுடன் கதைக்க முடியாது இருந்தது. இந்நிலையில் எனக்கு அதுபற்றி தெரியும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதேவேளை தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் 60 பேர் வரையில் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராகவே வழக்கு தொடர வேண்டும். அதனை தாமதப்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »