இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய கட்சியொன்று ‘கிங் மேக்கராக’ உருவாகும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. 120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
சுமார் 90 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் லிக்குட் கட்சிக்கு 37 ஆசனங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர 14 கட்சிகள் ஆசனங்களை வென்றுள்ளன.
இந்நிலையில், யுனைடெட் அராப் லிஸ்ட் எனும் இஸ்லாமியக் கட்சியானது புதிய அரசாங்கத்தை அமைப்பதில் கிங் மேக்கராக விளங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் நிலைவரப்படி, யுனைடெட் அராப் லிஸ்ட் கட்சி 5 ஆசனங்களை வெல்லும் நிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில், அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளில் தனது கட்சியும் ஈடுபாடு காட்டத் தயாராகி வருவதாக யுனைடெட் அராப் லிஸ்ட் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ் கூறியுள்ளார்.
