அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தவுள்ள போதிலும், இலங்கையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பெரும்அளவிலான அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி ஏற்றுமதிகளை இந்தியா இடைநிறுத்தியுள்ளமை குறித்து கூறுகையிலேயே இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி கையிருப்பில் உள்ளமையால், இரண்டாவது டோஸ் செலுத்துவது பாதிக்கப்பட மாட்டா எனவும் இலங்கையினால் வாங்குவதற்கு கட்டளை கொடுக்கப்பட்ட 10 இலட்சம் தடுப்பூசிகள் 2 மாதங்களுக்குள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும்; அவர் கூறினார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனிக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த இத்தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்காக பாரிய அளவிலான தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா ஏப்ரல் இறுதிவரை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
