Our Feeds


Sunday, March 28, 2021

www.shortnews.lk

ஜெனீவா பிரேரணை: இலங்கையைக் கைவிடாத முஸ்லிம் நாடுகள்.

 



றிப்தி அலி


இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது.


இந்த தீர்மானித்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. அதேவேளை, 14 நாடுகள் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 30 வருடமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது நடந்ததாக  கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஐக்கிய நாடுகளின்  நிபுணர்குழு அவற்றை ஆராயும் விதத்தில் அறிக்கை சமர்பித்திருந்தது.

அதற்கு இலங்கைத் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது. அதன் பின்னர் இலங்கை அரசு தானாகவே அமைத்துக்கொண்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் பல விடயங்களை ஆராய்ந்து தனது அறிக்கையை சமர்பித்திருந்தது.

இந்த நிலையில், நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த இலங்கையிடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அமெரிக்கா, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுத்தது வந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்ரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இதனை அமுல்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் அவகாசம் கோரியது.

இந்த காலப் பகுதியில் காணாமல் போனோர் ஆணைக்குழு ஸ்தாபிப்பு போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனையடுத்து மேலும் இரண்டு வருட அவகாசம் கடந்த 2017ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால்  கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ அரசாங்கம், கடந்த 2020ஆம் ஆண்டு மார்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினை வாபஸ் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை எதிரான புதிய பிரேரணையொன்றினை பிரித்தானிய கடந்த பெப்ரவரி மாதம் சமர்ப்பித்தது. ஆறு நாடுகளின் அனுசரiயுடனேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பிலான இந்த பிரேரணையில் இலங்கை முஸ்லிம்கள் எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்படுகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பிலும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

நாற்பத்தேழு நாடுகள் அங்கம் வகிக்கின்ற இந்த ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க்பபட்டுள்ள குறித்த பிரேரணையினை எவ்வாறாவது தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இலங்கை அரசாம் களமிறங்கியது. இதற்கு பாகிஸ்தானின் உதவியினை இலங்கை கோரியிருந்தது.

இதற்கு ஆதரவு தேடும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரடியாக களமிறங்கியிருந்ததுடன் கடந்த மாதம் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

இவரின் வருகையினைத் தொடர்ந்து கொவிட் - 19 காரணமாக உயிரிழக்கு ஜனாஸாக்களை நல்லடகம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை (19) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினரான பங்களாஷே; குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மாவினின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்றவே அவர் சென்றிருந்தார்.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஆதரவளிக்குமாறு பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவிடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.

'பங்களாதேஷ் எப்போதும் இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும்' என இதற்கு அவர் பதலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மற்றுமொரு உறுப்பு நாடானா பஹ்ரேனின் பிரதி மன்னர் சல்மான் பின் ஹம்மர் அல் கலீபாவுடன் தொலைபேசில் உரையாடி பிரதமர் மஹிந்த ஆதரவினை கோரியிருந்தார்.

அது மாத்திரமல்லாமல், 57 முஸ்லிம் நாடுகளை உறுப்புரிமையாகக் கொண்ட சவூதி அரேபியாவின் ஜித்தாவினை தலைமையகமாகக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் செயலாளர் யூசுப் அல் ஒதைமீனுடன்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் உரையாடி இலங்கை ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை (23) வாக்கெடுப்பிற்கு வந்தது. இதன்போது 11 மேலதிக வாக்குகளினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளில் பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சோமாலியா மற்றும் பங்களாதேஷ் ஆகியன முஸ்லிம் நாடுகளாகும். அதேவேளை, இந்தோனேஷியா, சுடான், லிபியா, புர்கினா பாஸோ மற்றும் பஹ்ரேன் ஆகிய முஸ்லிம் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தன.

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த வாக்கெடுப்பு நிiவினை அடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன விசேட செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

'இலங்கையினைப் பொறுத்தவரை இன்று கவலைக்குரிய தினமாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த பிரேரணையினை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்குலக நாடுகளினால் முடியாமல் போயுள்ளது. ஒரு நாடு தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை அந்த நாடு ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

எனவே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் உள்ளகப் பொறிமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் செலுத்தப்பட்டிருப்பதுடன் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆகவே மொத்தமாக 47 உறுப்புநாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருப்பதுடன் ஏனைய 25 நாடுகள் அதனை நிராகரித்திருக்கின்றன' என்றார்.

இதேவேளை, குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டு சில விடயங்களை  அமுல்படுத்த கடமைப்பட்டுள்ளோம். இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுரவு செயலாளரான ஓய்வுபெற்ற கடற் படை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பபே தெரிவித்தார்.

இந்த பிரேரணையினை இலங்கை அரசாங்கம் ஒழுங்கான முறையில் கையாளாவிட்டால் பாரிய பொருளாதார விளைவுகளை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது.

ஏற்கனவே நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த பிரேணையினை ஒழுங்கான முறையில் கையாளாவிட்டல் இன்னும் பாரிய விளைவுகளை பொருளாதா ரீதியில் சந்திக்க நேரிடும் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈரான் விக்ரமதுங்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை ஆகியன எடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கள் தொடர்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »