இந்தோனேஷியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது, நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத குழுவொன்று உள்ளதாக இந்தோனேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுலாவெஸி தீவின் மக்காஸர் நகரிலுள்ள தேவாலயத்தில், குருத்தோலை ஞாயிறு தினமான நேற்று (28) தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்களில் வந்த இருவர், தேவாலயத்துக்குள் நுழைய முற்பட்டபோது, அவர்களை பாதுகாப்பு உத்தியோகத்தர் தடுக்க முயன்றதாகவும் அப்போது குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலாளிகள் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். பிரஸர் குக்கர் குண்டு எனக் குறிப்பிடப்படும் குண்டொன்றை இவர்கள் வெடிக்க வைத்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலாளிகளில் ஒருவர் பெண் எனவும் மற்றொருவர் ஆண் எனவும் இவர்கள் இருவரும் ஜம்மா அன்ஸாருத் தௌவலத் ((Jamaah Ansharut Daulah (JAD) ) எனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் இந்தோனேஷியாவின் தேசிய பொலிஸ் மா அதிபர் லிஸதியோ சிஜித் ப்ரபோவோ தெரிவித்துள்ளார்.
மேற்படி தீவிரவாத அமைப்பானது, இந்தோனேஷியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரான சுரபாயாவில் 2018 ஆம் ஆண்டு பல தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட பாரிய குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானது என குற்றம் சுமத்தப்படுகிறது. அத்தாக்குல்களில் 13 தாக்குதலாளிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
2019 ஜனவரியில் பிலிப்பைன்ஸின் ஜோலோ நகரின் தேவாலயமொன்றில் 20 பேர் கொல்லப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கும் இவ்வமைப்பே காரணம் என குற்றம் சுமத்தப்படுகின்றது. ஜே.ஏ.டி. அமைப்பின் அங்கத்தவர் ஒருவரும் அவரின் மனைவியும் இத்தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் மக்காஸர் நகரில் நேற்று குண்டுத்தாக்குதலை நடத்திய ஆணும் பெண்ணும் திருமணமான தம்பதிகளா என்பது தெரியவில்லை.
இவர்கள் எவ்வாறு அடையாளம் காணப்பட்டனர் என்பதை பொலிஸார் கூறவில்லை.
