Our Feeds


Friday, March 26, 2021

www.shortnews.lk

சாய்ந்தமருது குண்டுத் தாக்குதலின் பின் சாராவின் குரல் தனக்கு கேட்டதாக ஸஹ்ரானின் மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார். - பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் MP

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாகவுள்ள சாராவையும் ஹபு இன்னையும் இலங்கைக்கு அழைத்துவர இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் இதுவரை ஏன் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லையென எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.


நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்கள், தாக்குதல்கள் நடத்தப்பட்ட விதம், திட்டமிடப்பட்டமை மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான நபர்கள் குறித்து ஒருபுறம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் சஹ்ரானின் பின்புலம், அவருக்கு உதவிகளை செய்தவர்கள் மற்றும் அவரை வழிநடத்தியவர்கள் யாரென அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், ஆணைக்குழுவின் அறிக்கையில் துர்திஸ்டவசமாக அவ்வாறான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

என்றாலும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில விடயங்களை தொடர்புப்படுத்துவதன் மூலம் சில தெளிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆணைக்குழுவின் அறிக்கையில் 251ஆவது பக்கத்தில் சாய்ந்தமருதுவில் குண்டுவெடிப்பு இடம்பெற்றமை தொடர்பில் சாட்சிமளித்துள்ள சஹ்ரானின் மனைவி, குறித்த குண்டு வெடிப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சாராவின் குரல் தமக்கு கேட்தாகவும் அவர் உயிருடன் இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கையிலும் சாராவின் தாயின் டி.என்.ஏ பரிசோதனையின் பிரகாரம் சாரா உயிருடன் இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனின் குண்டுவெடிப்பு இடம்பெற்ற சாய்ந்தமருதுவில் இருந்து சாரா இந்தியாவுக்கு தப்பிச்செல்லும் வரை அவருக்கு உதவிபுரிந்தது யாரென்ற பிரச்சினை எமக்குள்ளது.

புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதான நிலந்த ஜயவர்தன அளித்துள்ள சாட்சியம் தொடர்பில் 245ஆவது பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஹபு இன் என்ற இந்திய பிரஜை இந்தியாவிருந்து சஹரானுடன் தொடர்புகளை பேணியுள்ளதாக கூறியுள்ளார். ஹபு இன்னுடன் சஹ்ரான் தொடர்புகளை பேணியதாக அவரது மனைவியும் சாட்சியம் வழங்கியுள்ளார். அவ்வாறெனின் யார் இந்த ஹபு இன்?. அரசாங்கம் அவரை இந்தியாவிலிருந்து அழைத்துவர நடவடிக்கையெடுத்துள்ளதா? இந்தியா அரசாங்கத்திடம் சாராவையும் ஹபு இன்னையும் இலங்கைக்கு அழைத்துவரும் கோரிக்கையை அரசாங்கம் முன்வைத்துள்ளதா?. இவர்கள் இருவரும் தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரிகள் என ஆணைக்குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள சிஐடியின் முன்னாள் பிரதானி ஷானி அபேசேகர உட்பட 19 பேரை மாற்றியதுடன் அவர்களை கைதும் செய்துள்ளனர். விரைவாக சஹ்ரானின் வலையமைப்பை அவர்கள்தான் கண்டறிந்து கைதுசெய்ய நடவடிக்கையெடுத்தனர். ஆகவே, ஆணைக்குழுவின் அறிக்கையின் சில காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி செல்லும் போது தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகள் யாரென தெளிவாக அறியக்கூடியதாக இருக்கும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »