‘பெகாஸஸ் ‘ என்ற செயலியொன்றை அரசு தருவித்துள்ளதாகவும் ,அதனூடாக எவரை வேண்டுமானாலும் புலனாய்வு செய்யலாமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்தான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது,
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் பேசி விளக்கமளித்தார்.அவர் கூறியவை ஏற்றுக்கொள்ளமுடியாதவை.அவரை காப்பாற்றும் டீலின் ஒரு அம்சமே இது. அப்போதைய பிரதமர் ரணிலுக்கு எதுவுமே தெரியாதென்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த அரசு, அந்த தாக்குதல் குறித்தான விசாரணைகளை உரிய முறையில் செய்யாமல் இஸ்லாமியர்கள் மீது அரச அச்சுறுத்தலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இப்போது பெகாஸஸ் என்ற செயலியை அரசு தருவித்துள்ளது. அந்த செயலியின் ஊடாக ஒருவரது தொலைபேசி கெமராவை இயக்கலாம். அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டறியலாம். இது ஆளுங்கட்சிக்குள் இருப்பவர்களையே தேட பயன்படுத்தப்படும். அதேபோல இதனால் அச்சுறுத்தல் உள்ளதென்பதை கூறிவைக்க விரும்புகிறேன் என ஹரீன் தெரிவித்தார்.
