(எம்.எப்.எம்.பஸீர்)
கட்சியின் ஏகோபித்த தீர்மானத்துக்கு அமையவே, துறைமுக நகர் சட்டமூல வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
20 ஆம் அரசியல் திருத்த வாக்கெடுப்பின்போது கற்றுக்கொண்ட பாடத்துக்கு அமைய, இந்த ஒன்றிணைந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அதன்படியே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்றதாகவும் அவர் கூறினார்.
நேற்று (21) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் அவர்கள் இருந்த போதிலும், வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
குறிப்பாக துறைமுக நகர ஆணைக் குழு சட்ட மூலத்தில் முன்னெடுக்க வேண்டிய சில திருத்தங்கள் குறித்த பரிந்துரைகள் எம்மால் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஆணைக்குழு உறுப்பினர்களில் 5 பேர் பதவி வழியாக உள்வாங்கப்படல் வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எமது யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் எவ்வாறு வாக்களிப்பின் போது நடந்துகொள்வது, நிராகரிக்கப்பட்டால் எவ்வாறு நடந்துகொள்வது என்பது தொடர்பில் ஆராயப்ப்ட்டது. எனினும் எமது குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்தனர் என அவர் கூறினார்.
