(எம்.எப்.எம்.பஸீர்)
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில், அவரை தற்போதைய சூழலில் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் கட்டணம் செலுத்தும் சிகிச்சை பிரிவொன்றுக்கு மாற்ற முடியும் என உயர் நீதிமன்றம் இன்று (21) அறிவித்தது.
இதன்போது, கடந்த தவணையின்போது அசாத் சாலி விவகார விசாரணைகளை நிறைவு செய்ய 3 வார கால அவகாசத்தை சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோரியிருந்த நிலையில், இந்த விசாரணைகள் இன்னும் முடியடையவில்லை என அவர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரிதவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதங்களை முன்வைத்ததுடன், கடந்த 18 ஆம் திகதி தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தையும் அடிப்படையாக கொண்டு, விடயங்களை தெளிவுபடுத்தினார். கடந்த 16 ஆம் திகதி அசாத்சாலி சுகயீனம் காரணமாக தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் தற்போது அவர் சாதாரண சிகிச்சை அறையான ( வோர்ட்) 49 ஆம் அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போதும் அவர் சிகிச்சை பெறுவதாகவும் கூறினார்.
இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸிடம் திறந்த மன்றில் கேள்வி எழுப்பிய நீதியரசர் எஸ். துரைராஜா, இன்று நாட்டில் நிலவும் சூழலில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைத்து மாரடைப்புக்கு உள்ளாகியுள்ள இவ்வழக்கின் கைதிக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளதா என வினவினார்.
அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அவ்வாறன வசதிகள் இல்லை என குறிப்பிட்டார்.
