(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதால் முறையான சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியசாலைகளில் தேவையான வசதிகள் குறைவு. இவையே மரணங்கள் அதிகரிக்க காரணமாகும். அத்துடன் தடுப்பூசி ஏற்றி வைரஸை கட்டுப்படுத்த முடியாது என வைரஸ் தொடர்பான வைத்திய நிபுணரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
லங்கா சமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் பாரியளவில் அதிகரித்துள்ளது. கொவிட் -19 பரவல் தொடர்பில் சுகாதாரத் துறையினரால் ஊடகங்களில் தெரிவிக்கப்படும் தரவுகள் உண்மையானவை அல்ல. அதனையும்விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஏனெனில் தற்போது கொத்தணி முறையிலிருந்து தாண்டி சமூகமயமாகி உள்ளது. அனைத்து பிரதேசங்களில் இருந்தும் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று தெரியாது.
அத்துடன் இந்த வைரஸை தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் எமது நாட்டில் கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வதாக இருந்தால் சுமார் 80 சத வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டும். ஆனால் இதுவரைக்கும் ஒரு வீதமானவர்களுக்கே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் வயது முதிர்ந்தவர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்குவதன் மூலம் வைரஸ் தொற்றினால் மரணிக்கும் வீதத்தை கட்டுப்படுத்தலாம். இவர்களுக்கு வழங்குவதற்கும் தேவையான அளவு தடுப்பூசி நாட்டில் இல்லை. இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இன்னும் 6மாதங்கள்வரை செல்லும்.
மேலும் நாட்டில் கொவிட் -19 மரணங்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக இருப்பது வைத்தியசாலைகளில் போதுமானளவு வசதிகள் இல்லாமையாகும். கடந்த காலங்களில் தொற்றாளர்கள் குறைவாக கண்டுபிடிக்கப்படும்போது அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதால், மரண வீதம் குறைவாக இருந்தது.
தற்போது பாரியளவில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். அதனால் வைத்தியசாலைகளில் அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
