காசா மற்றும் இஸ்ரேலின் முன்னேற்றங்களை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து வருகிறது, தேவை ஏற்பட்டால் காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் 11 நாட்கள் நீடித்த கடுமையான மோதல் எகிப்தின் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அதில் காசாவில் சுமார் 242 பேரும் இஸ்ரேலில் சுமார் 13 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் காசாவின் முன்னேற்றங்கள் குறித்து தினசரி மதிப்பீடு செய்யப்படுவதாக பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய டெய்லி மிரரிடம் தெரிவித்தார்.
காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தேவை ஏற்பட்டால் இலங்கையர்கள் பல கட்டங்களில் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கை சமூகத்தின் அவல நிலையை இலங்கை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை பாலசூரிய மறுத்தார்.
காசாவிற்கு அருகில் ஒரு சில இலங்கையர்கள் வேலை செய்கிறார்கள், மற்றவர்கள் இஸ்ரேலில் உள்ளனர்.
இலங்கை சமூகத்தின் சிறந்த நலனை அரசாங்கம் எப்போதும் மனதில் கொண்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
