(எம்.எப்.எம்.பஸீர்)
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணங்களை முன்னெடுக்க பலருக்கு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது கையெழுத்திட்டு அனுமதிப்பத்திரங்களை விநியோகித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய தேவைகளுக்காக குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டு புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பெயர், தொலைபேசி இலக்கத்தையும் இணைத்து இந்த அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அனுமதிப்பத்திரம் பெற்ற பலர், புத்தளம் மாவட்ட எல்லையையும் தாண்டி சென்று வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயணத் தடை நிலவும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்காக அனுமதிப்பத்திரம் வழங்கும் அதிகாரம் பிரதேச மற்றும் மாவட்ட செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமின் இந்நடவடிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேராவை தொடர்புகொண்டு கேட்ட போது,
‘ அவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்கியிருப்பின் அது சட்ட ரீதியானது அல்ல எனவும், அவ்வாறு இடம்பெற்றிருப்பின் உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து, குறித்த அனுமதிப்பத்திரங்களில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஜி.எஸ். ஜயமஹவை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘ நாடாளுமன்ற உறுப்பினர் எனக்கு அழைப்பெடுத்து, பயணக் கட்டுப்பாடு நிலவும் காலப்பகுதியில் சென்று வர முடியுமான நபர்கள் குறித்து என்னிடம் வினவினார். அது குறித்து நான் விளக்கினேன். எனினும் ஒருபோதும் அவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்க நான் அனுமதிக்கவில்லை.
அத்துடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் முன்னெடுக்கும் அந்தச் செயல் தொடர்பில் தெரிய வந்தவுடன் அதனை நிறுத்த உரிய ஆலோசனைகளை வழங்கினேன் என தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதி எனற் ரீதியில், அதிகாரிகள் தமக்கு கீழேயே செயற்படுவதாகவும் அதன் பிரகாரம், ஒருவருக்கு பயணம் செய்ய அனுமதி வழங்க அனுமதிக்குமாறு பொலிஸாரை கோர தன்னால் முடியும் எனவும், தான் கடந்த 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பிரகாரமே செயற்பட்டதாகவும் அலி சப்லி ரஹீம் எம்.பி. கூறினார்.
