(எம்.எப்.எம்.பஸீர்)
இவர்களில் 724 பேர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டதாகவும் ஏனையோர் தாக்குதலுக்கு முன்னரான பல்வேறு அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் அரச தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், குறித்த தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய 8 வழக்குகள் தற்போதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தனித் தனியாக பிரதான வழக்குகள் எதிர்வரும் ஜூலை 3 ஆம் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதன்போது குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலையை இதன்போது வெளிப்படுத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண
‘இந்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் 2019 ஏப்ரல் மாதம் அந்தந்த பொலிஸ் நிலையங்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சிஐடியினரிடம் கையளிக்கப்பட்டன.
அது முதல் இந்த தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் 724 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 227 பேர் விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 83 பேர் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சிரிஐடி எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 205 மில்லியன் ரூபா வரையிலான பணம், தங்க நகைகள், மாணிக்கக் கற்கள் பொலிஸாரினால் இந்த விசாரணைகளில் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 100 வங்கிக் கணக்குகளில் உள்ள 134 மில்லியன் ரூபா பணம் வரை தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் 9800 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 21 ஆயிரம் தொலைபேசி இலக்கங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
1000 ஏக்கர் வரையிலான நிலம் பெளதீக ரீதியாக பொலிஸ் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன. கேகாலை, புத்தளம் மாவட்டங்களில் இவ்வாறான நிலங்கள் பொலிஸ் பொறுப்பில் உள்ளன.
இது இவ்வாறிருக்க, இந்த விசாரணைகளை முன்னெடுத்து செல்லும்போதே, தற்கொலை குண்டுதாரிகளுக்கு தலைமை வகித்த ஸஹ்ரான் ஹாஷிம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாத நடவடிக்கைகளை திட்டமிட்டு பரப்பியமை தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டன . எனவே பொலிஸார், தாக்குதல் சம்பவங்களுக்கு மேலதிகமாக 2018 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாதத்தை வளர்க்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
