Our Feeds


Monday, June 14, 2021

www.shortnews.lk

அஸாத் சாலியின் வழக்கின் இன்று உயர் நீதி மன்றில் நடந்தது என்ன? - முழு விபரம்.

 



(எம்.எப்.எம்.பஸீர்)


கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில் அடுத்த இரு வாரங்களில் முடிவுக்கு வரக் கூடியதாக இருக்கும் என உயர் நீதிமன்றுக்கு இன்று (14) அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த மனுவை அவசர அவசியம் கருதிய மனுவாக கருதி எதிர்வரும் 28 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

இது குறித்த மனு உயர் நீதிமன்ற நீதியர்சர் எல்.டி.பி. தெஹிதெனிய, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

மனு மீதான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அசாத் சாலி ஊடக சந்திப்பொன்றில் கூறிய கருத்துக்கள் குறித்த விசாரணை நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. அது குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை கோவையை ஆராய்ந்த பின்னர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதா இல்லையா, அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். அடுத்துவரும் ஒரு வாரத்துக்குள் அது சாத்தியமாகும்.’ என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.

இதன்போது நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய, மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்திலான விசாரணைகள் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அவர் அந்த விசாரணைகள், இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் அதனை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட் சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா, சந்ரகேஷ் பிருந்தா உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றில் வாதங்களை முன்வைத்து, இந்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் மனுதாரரான அசாத் சாலிக்கு எந்த தொடர்புகளும் இல்லை என குறிப்பிட்டார்.

அத்துடன் ஊடகங்களுக்கு கூறிய சர்ச்சைக்குரியது என கூறபப்டும் கருத்தில், எந்தக் குரோத மனப்பான்மையையும் தூண்டும் விடயங்களும் மக்களை தவறாக வழி நடத்தும் விடயங்களும் இல்லை எனவும், குறித்த கருத்தை வெளிப்படுத்தும்போது அவரது நோக்கம் பிரச்சினைகளை ஏற்படுத்துவது அல்ல என்பதையும் நீதிமன்றுக்கு நிரூபிக்க தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றில் குறிப்பிட்டார்

அத்துடன் மாவனெல்லை சம்பவத்துடனும் அசாத் சாலிக்கு எந்த தொடர்புகளும் இல்லை எனவும் அவசியம் எனில் இவை தொடர்பில் எழுத்துமூலம் சமர்ப்பணங்களை முன்வைக்கவும் தயார் என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா குறிப்பிட்டார்.

இதனையடுத்து குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், எதிர்வரும் 28 ஆம் திகதிவரை வழக்கை ஒத்தி வைத்தது. அன்றைய தினம் அவ்வழக்கை பரிசீலனைக்கு எடுக்க, அவசர அவசியம் கருதிய மனுவாக இம்மனுவை நீதிமன்றம் பெயரிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »