இலங்கையிலிருந்து ஆயுத குழுவொன்று தமிழகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இந்திய உளவுப் பிரிவை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இலங்கையிலிருந்து ஆயுத குழுக்கள் தமிழகத்திற்குள் செல்ல முயற்சித்ததை அடுத்து, தமிழக கரையோர பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
ஊடகங்களில் வெளியான தகவல்களின் ஊடாகவே தாமும் அறிந்துக்கொண்டதாக உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
இவ்வாறான பின்னணியில், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு மேலதிக தகவல்களை வழங்க முடியாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான சம்பவம் குறித்து இன்டர்போல் பொலிஸார் தமக்கு எந்தவித அறிவிப்புக்களையும் வழங்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து ஆயுத குழுவொன்று தமிழகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, தமிழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த 12ம் திகதி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
