பா.நிரோஸ்
எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென, ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் அனுப்பியிருந்த அறிக்கை பல்வேறான நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன.
சாகர காரியவசத்துக்கு பதிலளிப்பதற்காக நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் உதய கம்மன்பில, “எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பில் தான் தனித்து தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை எனவும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் தீர்மானம்” ஆகும் என்றார்.
மேலும், இதுத் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, சாகர காரியவசத்துக்கு அமைச்சர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தார். இதேவேளை, தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசமும் நேற்று (14) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்
சந்திப்பொன்றை நேற்று (14) ஏற்பாடு செய்திருந்தார்.
எனினும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பு பின்னர் அவரசமாக இரத்துச் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் பொதுச் செலயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்துக்கு எதிர்காலத்தில் பதிலளிப்பேன் எனவும், அழுத்தங்கள் காரணமாக ஊடகவியலாளர் சந்திப்பை நிறுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிருந்து சாகர காரியவசம் பதவி விலக வேண்டுமென உதய கம்மன்பிலவுக்கு ஆதரவான ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அழுத்தங்கொடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது.
