பயணக் கட்டுப்பாட்டை நாளைய தினம் தளர்த்தாது, தொடர்ந்தும் இவ்வாறே அமுலில் வைக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ளது.
சில தினங்களுக்கேனும் நாடு திறக்கப்படுமாக இருந்தால், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட நிலைமை, மீண்டும் நாட்டில் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அந்த சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 28ம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் வைக்குமாறு தமது சங்கம் ஏற்கனவே கோரியிருந்த நிலையில், 21ம் திகதி முதல் 23ம் திகதி வரை நாடு திறக்கப்படுவதற்கான அடிப்படை காரணம் என்னவென்பது தெளிவில்லை எனவும் அந்த சங்கம் கூறுகின்றது.
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் நாளாந்தம் தொடர்ந்து 2000திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், நாளாந்தம் 50திற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகி வருவதாகவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிக்கின்றது.
அதேபோன்று, மிக அபாயகரமான திரிபான டெல்டா வைரஸும், சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமை, மேலும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.
இதனால், தீர்மானமிக்க தருணத்தில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தாது, தொடர்ந்தும் அமுலில் வைக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
