உணவு, மளிகை,பேக்கரி உள்ளிட்ட பொருட்களை பொதி செய்யும் போது, உறைகளைக் கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதிப் பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகையால், அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகைக் கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில், அந்தக் கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
உறைகளை எடுக்கும்போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு அந்த உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதால் இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் எனக் கருதப்படுகிறது.
