Our Feeds


Wednesday, June 2, 2021

www.shortnews.lk

BREAKING: அசாத் சாலியின் மனு மீதான விசாரணைகளிலிருந்து விலகினார் நீதியரசர் ஜனக்!

 


 

(எம்.எப்.எம்.பஸீர்)


கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்சிஎப்ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளிலிருந்து விலகுவதாக நீதியர்சர் ஜனக் டி சில்வா இன்று (02) அறிவித்தார்.


இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டி ஆப்றூ, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டபோதே, நீதியரசர் ஜனக் டி சில்வா இதனை அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக தான் செயற்பட்டிருந்தமையால் குறித்த மனுவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

இன்றைய தினம் மனு மீதான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அசாத் சாலி ஊடக சந்திப்பொன்றில் கூறிய கருத்துக்கள் குறித்த விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்திலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன், ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த மனு, ஜனக் டி சில்வா இல்லாத நீதியர்சரகள் குழாம் ஒன்றின் முன்னிலையில் பரிசீலிக்கப்படுவதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றி கடந்த எப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »