Our Feeds


Wednesday, June 30, 2021

www.shortnews.lk

பெற்றோர்களின் கவனத்திற்கு: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களை தாக்கும் MIS-C என்ற பல உறுப்பு அழற்சி நிலை நோய்

 



(எம்.மனோசித்ரா)


உலகலாவிய உயிர்கொல்லியாகவுள்ள கொவிட் வைரஸ் பரவல் ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன. கொவிட்-19 வைரஸ் தொற்றினால் மாத்திரம் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருந்த நாம், தற்போது அதனால் வேறு பல நோய்த் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது கொவிட் தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் நோய் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களை தாக்கும் பல உறுப்பு அழற்சி நிலை 'மிஸ்-சி'  - Multisystem Infalmmatory Syndrome in Children - MIS-C என்ற நோய் பெரும்பாலான உடற்பாகங்களை அல்லது தொகுதிகளை பாதிக்கக் கூடியதாகும். 

எனினும் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களில் நூற்றுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவானோரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 8 - 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுமாயின் தாமதிக்காது வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சிறுவர்களைத் தாக்கும்  ''பல உறுப்பு அழற்சி நிலை (மிஸ்-சி)''  - Multisystem Infalmmatory Syndrome in Children - (MIS-C) நோய் என்றால் என்ன ?

கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களை தாக்கும் இந்நோய் மருத்துவர்களால் 'பல உறுப்பு அழற்சி நிலை (மிஸ்-சி) அதாவது Multisystem Infalmmatory Syndrome in Children என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பல உறுப்பு அழற்சி நிலை (MIS-C ) என்பது கொவிட்- 19 நோய்த் தொற்றுடன் தொடர்புடையதாக ஏற்படும் ஒரு தீவிர நோயாக கருதப்படுகின்றது.  

இதற்கான வலிமையான  ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் பல உறுப்பு அழற்சி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பல குழந்தைகள் கொவிட்- 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொவிட்- 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக நிருபிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கங்கள்

சிறுவர்களுக்கு கொவிட்- 19 நோய்த் தொற்று ஏற்பட்டு அதன் தீவிரம் குறைவாகக் காணப்பட்டாலும், பல உறுப்பு அழற்சி நிலை (MIS-C) ஆனது அரிதாகக் காணப்படும். ஆனால் அதி தீவிர சிக்கல் நிலைமைகளை உருவாக்கும். இந்த நோய் நிலைமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், தோல் மற்றும் சமிபாட்டுத் தொகுதி போன்ற பல உறுப்புக்கள் அழற்சிக்கு உள்ளாகின்றன.

2020 ஏப்ரல் தொடக்கம் பல உறுப்பு அழற்சி  நிலை  பற்றிய அறிக்கைகள் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டபோதிலும், இலங்கையில் அண்மையிலேயே இந்நோய் நிலை ஏற்பட்டுள்ளது. 

சில குழந்தைகள் கொவிட்-19 நோயின் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிக்காட்டாது, பல உறுப்பு அழற்சி நிலையினால் நேரடியாக பாதிக்கப்பட்டு அந்நிலையின் அறிகுறிகளை வெளிக்காட்டலாம் என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்

குழந்தை நல மருத்துவ நிபுணர்களால் கூறப்பட்டவாறு கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல உறுப்பு அழற்சி நிலையின் அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பதால் ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறியலாம்.

▪️காய்ச்சல்

▪️வயிற்றுவலி

▪️வயிற்றோட்டம்

▪️கழுத்துவலி

▪️தோலில் ஏற்படும் மாற்றங்கள்

▪️கண்கள் சிவத்தல்

▪️வழக்கத்திற்கு மாறாக சோர்வு மற்றும் களைப்பு ஏற்படல்.

அதிதீவிர நிலைக்கான எச்சரிக்கை அறிகுறிகள்

▪️சுவாசிப்பதில் சிரமம்

▪️மார்புப் பகுதியில் இறுக்கும் உணர்வு

▪️நித்திரையில் இருந்து விழிக்கவோ அல்லது தொடர்ந்து விழித்திருக்கவோ இயலாமை

▪️வெளிறிய தோல்

▪️கடுமையான வயிற்றுவலி

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்படுகின்ற எந்த குழந்தையையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

இந்நோயிலிருந்து சிறுவர் பாதுகாப்பது எவ்வாறு?

 நாட்டில் நிலவும் நோய்த் தொற்று சூழ்நிலைக்கு மத்தியில், கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து எமது குழந்தைகளை பாதுகாக்க நாம் அனைவரும் விழிப்பாக இருந்து மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

ஒரு வீட்டில் உள்ள நபரொருவர்  கொவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் வீட்டில் உள்ள அனைவருக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கின்றது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். எனவே தேவையற்ற பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக முற்றிலும் தடுப்பூசி பெற்றவர்கள் நோயினால் ஏற்படும் கடுமையான சிக்கல்களின் ஆபத்து தன்மையை கணிசமாக குறைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களிற்கு நோய்த் தொற்று ஏற்படலாம். மேலும் அவர்கள் மூலம் மற்றவர்களிற்கு நோய் பரவக்கூடும். எனவே இது குறித்து அவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதோடு கொவிட் -19 நோய்த் தொற்றை தடுப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க, கைகழுவுதல்,  முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் இருமும்போதும், தும்மும்போதும்  செயல்படுதல்  போன்ற பழக்கவழக்கங்களை சரியான முறையில் பின்பற்றுவதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். நீங்கள் சொல்லிக்கொடுத்த அறிவுரைகளை சரியாகப் பின்பற்றுகின்றார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் குழந்தையை கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சன நெரிசல் மிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் மூக்கு, வாய், மற்றும் முகக்கவசங்களை அடிக்கடி தொடுவதால் இலகுவாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இரண்டு வயதிற்கு குறைந்த குழந்தைகள் எந்தவொரு முகக்கவசத்தையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்படவில்லை.

பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க, தற்போதைய சூழ்நிலையில் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைவாக பேணுவது அவசியமாகும். ஏனெனில் பிள்ளைகள் விருந்தினர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதால் அவர்களிற்கு தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் அதிருப்தி அடையலாம். அவர்களை வீடுகளில் இயன்றளவு மகிழ்ச்சியாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

வீடுகளில் குழந்தைகளுடன் செய்யக் கூடிய செயற்பாடுகளைப் பற்றி அறிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இதனால் குழந்தைகளின் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவி புரிவதற்கும், அவர்களை சந்தோசமாகவும் வைத்திருக்க உதவி புரியும். மேலும் குழந்தைகளுக்கு அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுவதற்கு தொலைபேசி அல்லது இணையத்தளத்தின் மூலம் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுங்கள்.

இந்த சவாலான காலகட்டத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதால் நாம் எமது பாதுகாப்பையும், குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »