Our Feeds


Wednesday, June 23, 2021

www.shortnews.lk

அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து இன்று ரணில் விக்கிரமசிங்க MP பாராளுமன்றில் ஆற்றிய முதல் உரை - VIDEO

 



(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தோல்வியடைந்திருக்கிறது. அதனால் தொடர்ந்து செல்ல முடியாது. அத்துடன் அமைச்சரவையின் பொறுப்பை இராணுவ தளபதிக்கு வழங்கியிருப்பது அரசியலமைப்புக்கு விரோதமான செயலாகும்.

அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது இராணுவ ஆட்சிக்கே செல்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் அவர் ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் கடந்த காலங்கள் தொடர்பில் பேசுவது பயனில்லை. மாறாக இந்த நிலைமையில் இருந்து நாங்கள் எவ்வாறு கரை சேர்வது, இதற்கு எவ்வாறு தீர்வை தேடிக்கொள்வது என்றே கதைக்க வேண்டும்.

இந்த நிலைமை சீராக இன்னும் ஓரிரு வருடங்கள் செல்லும் எனவும் இன்னும் சிலர் 10 வருடங்கள் வரை செல்லும் என கூறுகின்றனர். ஆனால் எங்களுக்கு தேவையாக இருப்பது இதற்கானதொரு தீர்வாகும். அதற்கு ஒரு திட்டம் இருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் இதுவரை அந்தத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. என்னை பொறுத்தவரையில் இதற்கான ஒரே வழி, சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்வதாகும். இதற்கு நீங்கள் இணக்கம் இல்லை என்றால் இதற்கான மாற்று வழியை எங்களுக்குச் சொல்ல வேண்டும். மாற்றுவழி இல்லாமல் புள்ளி விபரங்கள் தொடர்பில் கதைத்து எந்தப் பயனும் இல்லை.

அத்துடன் நாட்டில் உரப் பிச்சினை, எரிபொருள் பிரச்சினை, கல்வி பிரச்சினை என தீர்ப்தற்கு பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே தடவையில் வெடித்தால் என்ன செய்வது? அரசாங்கம் மாத்திரமல்ல நாடாளுமன்றமும் இல்லாமல்போகும். இதனை கருத்திற்கொண்டு இது தொடர்பாக கலந்துரையாட எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

எந்தவொரு ஜனநாயக அரசிலும் 3 அணிகள் உள்ளன. முதலாவது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை. அடுத்தது சிவில் அதிகாரம். அதாவது செயலாளர்கள் மற்றும் அதன் கீழ் செயலாற்றுபவர்கள். மூன்றாவது இராணுவ அதிகாரம்.

ஆனால், இன்று இராணுவ அதிகாரத்தை பெற்றுக் கொண்டு நாட்டை நிர்வகிப்பதாகும். இவ்வாறு செய்ய முடியாது. தவறான முறையாகும். முதலீட்டுச் சபை கலந்துரையாடலுக்கு நிதி அமைச்சர் வந்திருக்க வேண்டும் அல்லது இராஜாங்க அமைச்சர் வந்திருக்க வேண்டும். அந்தச் சபையில் இராணுவத் தளபதி கதைக்கிறார். இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்களும் சென்று விட்டார்கள். இது இராணுவ ஆட்சிக்கே செல்கின்றது.

இந்த பொறுப்பை அரசாங்கம் எடுத்துகொண்டு செல்வதாக இருந்தால் அதற்கு பிரச்சினை இல்லை. அதற்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் அந்த மக்கள் ஆணையை இராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்ல இடமளிக்கவேண்டாம் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »