Our Feeds


Thursday, July 15, 2021

www.shortnews.lk

சஹ்ரானின் சகோதரி உட்பட 62 பேருக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

 



உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 62 பேரையும் எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று (15) உத்தரவிட்டார்.


கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 58 பேருடன் குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்ய பஸ் வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 2 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 62 பேரின் வழக்குகள் இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

ஏனைய 62 பேரும் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக சந்தேகநபர்களை நீதிமன்றுக்கு அழைத்து வர முடியாத காரணத்தினால் காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் 62 பேரையும் எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்..

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »