Our Feeds


Thursday, August 26, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: ஸஹ்ரான் குழு சூட்சுமமாக 2ம் நிலை குழுவொன்றையும் தயார் செய்திருந்தது - பொலிஸ் மா அதிபர்

 



(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி ஸஹ்ரான் உள்ளிட்ட குழுவானது, மொத்த பயங்கரவாத வலையமைப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.


அத்துடன் மிக சூட்சுமமாக, குறித்த பயங்கரவாத வலையமைப்பு 2 ஆம் நிலை குழுவொன்றை தயார்படுத்தி, சிறுவர்களுக்கு தமது சிந்தனைகளை விதைத்துள்ளமையும் விசாரணைகளின் ஊடாக தெரிய வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக நேற்று விசேட தெளிவுபடுத்தல்களை வெளியிட்டே பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இதனை குறிப்பிட்டார்.


உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்க்குதல்கள் தொடர்பில் மொத்தமாக 723 சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணையாளர்களால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 311 பேர் விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலின் கீழோ வைக்கப்ப்ட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறிப்பிட்டார்.


அத்துடன் தாக்குதலுடன் தொடர்புபட்ட அல்லது அதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய நபர்களின் 356 மில்லியன் ரூபா பெறுமதியான பணம், அசையும், அசையா சொத்துக்கள் இதுவரை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் மேல்லும் 168 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.


இதனைவிட விசேடமாக சுமார் ஒரு இலட்சம் தொலைபேசி இலக்கங்கள் வரை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை பிரதான 8 குண்டுவெடிப்புகள் தொடர்பில் சதி செய்தமை உட்பட 46 பேருக்கு எதிராக 11 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி செய்தார்.


சுமார் 20 நிமிடங்கள் நீடித்த பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் விசேட தெலிவுபடுத்தல் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


‘ உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கபப்டும் அடிப்படையற்ற கருத்துக்களை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வெளிப்படுத்துவதற்காக அவ்விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உயர் அதிகாரி, பொலிஸ் மா அதிபர் எனும் ரீதியில் இந்த விடயங்களை வெளிப்படுத்துகிறேன்.


இந்த விசாரணைகளில் அனைத்து விடயங்களையும் அவ்வாறே வெளிப்படுத்த முடியாது. அது விசாரணைகளையும், வழக்குகளையும் பாதிக்கும். எனவே வெளிப்படுத்த முடியுமான விடயங்களை எம்மால் வெளிப்படுத்த முடியும்.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் வெறுமனே குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது அல்ல. 2019 ஏபரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அதனை உறுதி செய்கின்றன.


கடந்த 2017 மார்ச் 10 ஆம் திகதி தமக்கு மாற்றமான சிந்தனைகளை கொண்டிருந்த முஸ்லிம் குழுவினர் மீது காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், 2018 பெப்ரவரி 6 ஆம் திகதி வீடு ஒன்றின் மீதான குண்டுத் தாக்குதல், 2018 பெப்ரவரி 12 ஆம் திகதி அரசியல் அலுவலகம் ஒன்றின் மீதான குண்டு வீச்சு, 2018 மே 7 ஆம் திகதி நுவரெலியா விடுமுறை விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சி, 2018 ஆகஸ்ட் 26 இல் வெடிப்பு ஒன்றினால் காயமடைந்த ரில்வான் என்பவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, 2018 நவம்பர் 30 வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களது துப்பாக்கிகள் அபகரிக்கப்பட்டமை,


2018 டிசம்பர் 25 மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு நடவடிக்கைகள், 2019 ஜனவரி 16 வண்ணாத்துவில்லுவில் ஆயுத களஞ்சியம் கண்டுபிடிப்பும் 4 பேர் கைதும், 2019 மார்ச் 9 தஸ்லீம் என்பவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, 2019 ஏப்ரல் 16 காத்தான்குடி பாலமுனை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று குண்டுவைத்து வெடிக்கச் செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் தனித் தனி சம்பவங்களாக பார்க்கப்பட்டே சிஐடி. மற்றும் பிராந்திய பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டிருந்தன.


எனினும் அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த சம்பவங்கள் என்பது பின்னர் தெளிவானது.


விசாரணையாளர்கள், பொலிஸார், உளவுத் துறை அதிகாரிகளிடையே ஒரு தகவல் பரிமாற்ற வலையமைப்பு காணப்படாத நிலையில், குண்டுத் தாக்குதலுக்கு முன்னரேயே இவற்றுக்கு இடையிலான தொடர்பை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது.


குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து இது தொடர்பில் விசாரணை செய்த சிஐடியின் ஒரு குழு இது தொடர்பில் சரியாக விசாரிக்கவில்லை. குறுகிய காலத்தில் விசாரணைகளை நிறைவு செய்து, பிரசித்தம் தேடிக்கொள்ளும் நோக்கில் அக்குழு செயற்பட்டுள்ளது. அதனால் ஸஹ்ரான் குழுவின் அனைவரும் இறந்துவிட்டதாகவும், எஞ்சியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்களை அவர்கள் குறிப்பிட்டனர்.


இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் என தங்களை தாங்களே அழைத்துக்கொண்ட ஒரு சிரு குழு இந்த தாக்குதல்களை நடத்தியதாக கூறி அவர்கள் விசாரணைகளை நிறைவு செய்ய முற்பட்டுள்ளனர். அவர்கள் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.


அப்போது சிஐடிக்கு பொறுப்பாக தனியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் இருந்தார்.


நான் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின்னர், ஜனாதிபதியால் எனக்கு இவ்விவகாரம் தொடர்பில் பூரண விசாரணை செய்யும் அதிகாரம் , சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதன்படி சிஐடி., ரி.ஐ.டி., ஏனைய பொலிஸ் உளவுப் பிரிவுகளை ஒருங்கமைத்து, இணைத்து இவ்விசாரணைகளை புது வியூகத்துடன் முன்னெடுத்தோம்.


முன்னர் விசாரணையாளர்கள், தாக்குதல் குறித்த சந்தேக நபர்களின் 4 மாத தொலைபேசி விபரங்களையே பகுப்பாய்வு செய்து விசாரித்தனர். எனினும் பின்னர் நாங்கள் கடந்த 2014, ஜூன் 29 ஆம் திகதி முதல் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் வரையிலும் அதன் பின்னருமான தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்தோம்.


இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தாக்குதலுடன் வெளிப்பட்ட இந்த அடிப்படைவாத சிந்தனை, எப்போது, எப்படி ஆரம்பித்தது, வளர்க்கப்பட்டது போன்ற விடயங்களும் விசாரணைக்கு உட்பட்டன.


இந்நிலையில் இது தொடர்பில் எனது கோரிக்கைக்கு அமைய விசாரணைகளுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்க சட்ட மா அதிபர், சிரேஷ்ட நிலை அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றையும் நியமித்தார். அவர்களது ஆலோனைக்கு அமைய விசாரணைகள் இடம்பெறுகின்றன.


இந்த விசாரணைகளில், தாக்குதல் நடத்த உதவிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் வெளிப்பட்டது. அது தொடர்பில் விசாரணை நடக்கிறது. வெளிநாட்டில் உள்ளவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இவ்விசாரணைகளில் வெளிப்பட்ட பிரதான விடயம், இந்த பயங்கரவாத வலையமைப்பின் சிந்தனைகளை எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல 2 ஆம் நிலை குழு தயார்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும்,. அதற்காக சிறுவர்க்ளுக்கு அச்சிந்தனை புத்தி ஜீவிகள் கொண்டு விதைக்கப்பட்டுள்ளமையும், ஸஹ்ரானின் குழுவானது இந்த பயங்கரவாத குழுவின் ஒரு பகுதி மட்டுமே என்பதும் விசாரணையில் வெளிப்பட்டது.


எனவே இந்த தாக்குதல்கலுடன் நேடி, மறைமுகமாக தொடர்புபட்டவர்கள் அனைவருக்கும் எதிராக இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவைக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க விசாரணைகள் மிக கவனமாக முன்னெடுக்கப்படுகிறது.


பயங்கரவாத தாக்குதல்களை எம்மால் தற்போதைக்கு தடுக்க முடியுமாக இருந்தாலும், உறுதியாக அதனை முற்றாக இல்லாமல் செய்ய, தொடர்ச்சியான விசாரணை, உளவு நடவடிக்கைகள் அவசியமாகும்.


இதுவரையிலான விசாரணைகளில் 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 311 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் அல்லது தடுப்புக் காவலின் கீழ் உள்ளனர். பல வங்கிக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. 365 மில்லியன் ரூபா பணம், அசையும் அசையா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்ப்ட்டு, 168 மில்லியன் சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.


இதுவரை 11 குற்றப் பத்திரிகைகள் 46 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100க்ற்கும் அதிகமான சம்பவங்கள் குரறித்த விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு ஆவணங்கள் சட்ட மா அதிபருக்கு அனுப்ப்பட்டுள்ளன.


சுமார் 52 ஆயிரம் பக்கங்களை கொண்ட 104 ஆவணங்கள் இவ்வாறு சட்ட மா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளன.


எனவே, இது ஒரு பரந்துபட்ட விசாரணை என்பது தெளிவாகிறது. இவ்விசாரணைகள் தொடர்பில் எனக்கு எந்த அழுத்தங்களும் எவராலும் பிரயோகிக்கப்படவில்லை.


இவ்விசாரணைகள் தொடர்பிலும், தொடர்புபட்ட பின்னணி தொடர்பிலும் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவற்றை நாம் மதிக்கிறோம். எனினும் வெறும் கருத்துக்களை வைத்து வழக்கு தொடுக்க முடியாது. அது தொடர்பில் சான்றுகள் இருப்பின் அவற்றை சி.ஐ.டி.க்கு தருமாறு நாம் கோருகிறோம். அப்போது அது குறித்து நாம் விசாரிக்க முடியும்.


இந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த, , காயமடைந்தவர்களுக்கு நிலை நாட்டப்படும் நியாயமாக, உறுதியான விசாரணைகள் ஊடாக குற்றவாளிகளை தண்டிப்பதையே நாம் கருதுகிறோம். எனவேதான் மிக ஆழமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »