இஸ்ரேலின் சிறைச்சாலையொன்றிலிருந்து பலஸ்தீன கைதிகள் ஆறுபேர் நேற்று தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் சுரங்கம் ஒன்றைத் தோண்டி, அதன் மூலம் தப்பிச் சென்றுள்ளனர் என நம்பப்படுகிறது.
இக்கைதிகளின் சிறைச்சாலைக் கூண்டிலிருந்து சிறைச்சாலை மதிலுக்கு வெளியே செல்லும் வகையில் இச்சுரங்கம் தோண்டப்பட்டிருந்தது. பல மாதங்களாக இச்சுரங்கம் தோண்டப்பட்டு வந்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
தப்பிச்சென்ற கைதிகளை கண்டுபிடிப்பதற்கான பாரிய தேடுதல் நடவடிக்கைகளை இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அல் அக்சா தியாகிக்கள் படையணியின் முன்னாள் தலைவர் ஒருவர் மற்றும் பாலஸ்தீன போராட்டக் குழு அங்கத்தவர்கள் ஐவருமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கைதிகள் சிறையிலிருந்து தப்பியதை பலஸ்தீன அமைப்புகள் கொண்டாடி வருகின்றன.
ஆனால், இது பாரிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தோல்வி என இஸ்ரேலிய சிறைச்சாலைகள் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உலகமே ஆச்சரியப்படும் இராணுவ மற்றும் ஆயுத பலம் கொண்ட நாடு இஸ்ரேல். இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மிகவும் பலமிக்க ஓர் அமைப்பாக உலகளவில் பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே இஸ்ரேலின் முழுப் பாதுகாப்பையும் சந்தேகப்படும் வகையில் குறித்த பாலஸ்தீன போராளிகள் தப்பிச் சென்றுள்ளமை கவனிக்கத் தக்கதாகும்.

