(இராஜதுரை ஹஷான்)
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை சட்டத்தில் முன்னிலையாக்குவதை தாமதப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஜனாதிபதி கோட்டபபய ராஜபக்க்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நல்லாட்சி அரசாங்கம் தனது 5 வருட பதவி காலத்தில் புலனாய்வு பிரிவையும் பாதுகாப்பு பிரிவையும் பலவீனப்படுத்தியதை பயங்கரவாதி ஸஹ்ரான் உள்ளிட்ட அவனது தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை போன்று பிறிதொரு தாக்குதல் நாட்டில் மீண்டும் இடம்பெறாமலிருக்க வேண்டுமாயின் புலனாய்வு பிரிவும் பாதுகாப்பு பிரிவும் பலம் பொருந்தியதாக காணப்பட வேண்டும். புலனாய்வு பிரிவினருக்காகவும் இராணுவத்தினருக்காகவும் குரல் கொடுத்ததால் சிறைவாசம் அனுபவித்தேன். தற்போதும் இவர்களுக்காக நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
