அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் அரச தரப்பிலிருந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவர்களில் 09 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு 06 பேர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் அரச தரப்பு உறுப்பினரான கப்பில அத்துகோராள, வாக்கெடுப்பு முடிந்த பின்னரே சபைக்குள் பிரவேசித்திருக்கின்றார்.
அத்துரலியே ரத்தன தேரர், அமைச்சர் விமல் வீரவன்ச, எஸ். வியாழேந்திரன், ஏ.எல்.எம் அத்தாவுல்லா, விஜேதாஸ ராஜபக்ஷ, அஷோக்க பிரியந்த உள்ளிட்ட உறுப்பினர்கள் விவாதத்தின் பின் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை.
எதிர்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு அவ்வப்போது ஆதரவு வழங்கிவந்த முஸ்லிம் எம்.பிக்களாகிய அலிசப்ரி ரஹீம், பைஷல் காசிம், எம.எச்.எம். ஹாரிஸ், எம்.எஸ். தௌபிக், நஷீர் அஹமட் உள்ளிட்ட உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
எவ்வாறாயினும் எதிர்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மான், எம். முஷாரப் உள்ளிட்டவர்கள் இந்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
