(நா.தனுஜா)
பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் எம்.டி.லமாவங்ஷ மற்றும் குறித்த பரிசோதனை உபகரணத்தைத் தயாரித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிக பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினரால் குறித்த உபகரணம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை உபகரணத்தின் மூலம் மிகவும் விரைவாகவும் குறைந்த செலவிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் கண்டு கொள்ள முடியும்.
அதன்படி குறித்த உபகரணத்தைப் பயன்படுத்தி 1, 500 ரூபா செலவில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்று அதனைத் தயாரித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த உபகரணத்துக்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தொழில்நுட்பக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனைப் பதிவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்த பரிசோதனை உபகரணத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச பேற்றன்ட் சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
