காலி பகுதியில் கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நிலையங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை பதிவு செய்ததன் பின்னர், தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாது, அட்டையை மட்டும் எடுத்து செல்ல முயற்சித்த சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி – சங்கமித்த மகளிர் வித்தியாலயத்தில் இன்று இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது மருந்தளவு இந்த மத்திய நிலையத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மத்திய நிலையத்திற்கு வருகைத் தந்த சிலர், தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை பதிவு செய்து, தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் தப்பிச் செல்ல முயற்சிப்பதனை அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதையடுத்து, சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய வேளையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தப்பிச் செல்ல முயற்சித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதலாவது மருந்தளவிற்கும் இதே விதமாக செயற்பட்டார்களா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தமது தரவு களஞ்சியத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் குறித்து நடத்தப்படும் ஆய்வு நடவடிக்கைகளுக்கு, இதனூடாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
