Our Feeds


Friday, October 1, 2021

ShortNews Admin

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்



(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரங்கள் தனித்தனியாக இன்று (01) கையளிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று குறித்த வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்றின் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

‘கனம் நீதிபதிகளே, இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் தலா 864 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இம்மன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் முன் வைக்கப்பட்டிருந்தது.

எனினும் அது மீளாய்வு செய்யப்பட்டு தற்போது தலா 855 குற்றச்சாட்டுக்களுடையதாக குற்றப் பகிர்வுப் பத்திரம் திருத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் 1,215 சாட்சியாளர்களின் பட்டியலும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

குண்டுத் தாக்குதலில், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்த சிலரின் பெயர்கள் தவறுதலாக இரு முறை பதியப்பட்டிருந்தமை இவ்வாறு குற்றச்சாட்டு அதிகரிக்க காரணமாக இருந்துள்ளது. இந்நிலையில் அதனை திருத்தி, திருத்தப்பட்ட குற்றப் பகிர்வுப் பத்திரத்துக்கு சட்ட மா அதிபர், பிரதம நீதியரசரிடம் அனுமதியையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் 855 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரத்தை கையளிக்குமாறு கோருகிறேன்.’ என தெரிவித்தார்.

இதனை சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு தனித் தனியாக குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »