(எம்.எப்.எம்.பஸீர்)
ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் (5 ஆவது சந்தேக நபர் தொடர்பில் மட்டும்) இன்று (01) முற்பகல் மீளவும் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையிலேயே இதுவரை இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் விளக்கினார்.
குறிப்பாக சிசிரிவி பதிவுகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னர் அதனை மையப்படுத்தி அவரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், தொலைபேசி தரவுகள் குறித்த அறிக்கையின் பின்னர் அதனை ஆராய்ந்தும் வாக்குமூலம் பெற வேண்டும் எனவும் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
‘இந்த விவகாரத்தில் தொடர்ச்சியான ஒரு அழுத்தம் கொடுக்கும் நிலைமையை நாம் அவதானித்துள்ளோம். முதலில் சம்பவத்தை அடுத்து ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு ஹிஷாலினியின் தாயார் உள்ளிட்டோர் சென்றபோது அங்கு இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சட்டத்தரணி ஒருவர் என அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையையும் பொலிஸ் மா அதிபர் எடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில், இவ்வழக்கு விசாரணையின் இடையே ஊடகவியலாளர் எனக் கூறிக்கொண்டு ரிஷாத் பதியுதீன் செயலர் ஒருவர் நீதிமன்றில் உட்கார்ந்து எமது வாதங்களை ஒலிப்பதிவு செய்ததாக நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அது தொடர்பில் விசாரணைகள் நடந்தன.
பர்சான் எனும் குறித்த நபர் வெளிப்புற நடவடிக்கைகளுக்கான செய்தியாளர் என குறித்த தனியார் தொலைக்காட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரி வாக்குமூலமளித்துள்ளார். எனினும் அவருக்கு சம்பளமோ, கொடுப்பனவுகளோ அவர்களால் செலுத்தப்படுவதில்லையாம். அவர் தொடர்பிலான ஆவணங்களோ அவர்களிடம் இல்லை. எனினும் குறித்த தனியார் தொலைக்காட்சியில் ரிஷாத் பதியுதீனுக்கும் பங்குகள் இருந்தமையால் அவரை இவ்வாறு வெளிப்புற நடவடிக்கை செய்தியாளராக இணைத்திருந்ததாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.
செய்தியாளர் என கூறும் குறித்த நபர், அந்த சம்பவத்தின் பின்னர் நீதிமன்றுக்கு வரவே இல்லை. அவர் உண்மையிலேயே செய்தி சேகரிப்புக்காக நீதிமன்றுக்கு வந்திருந்தால் ஏன் அதன் பின்னர் வரவில்லை. இவ்வாறான ஒரு போக்கே இந்த வழக்கில் உள்ளது.
