Our Feeds


Saturday, November 6, 2021

ShortTalk

அரிசிக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுங்கள்: அமைச்சர் சமல் நினைவுபடுத்திய சிறிமா ஆட்சிக் காலம்: எப்படியிருந்தது தெரியுமா?அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு மற்றும் பாசிப்பயறு போன்றவற்றை சாப்பிடுமாறு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தமை, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை நினைவுபடுத்துவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.


“நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா”? என அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் மரவள்ளிக்கிழங்கு, பாசிப்பயறு ஆகியவற்றை சாப்பிடுமாறு கூறியிருந்தார்.


இதன் போது நாட்டில் அரிசித் தட்டுப்பாடு உள்ளமையை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.


இதனையடுத்து, “இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் கடுமையான பட்டினியை எதிர்நோக்கப் போகின்றது என்பதையே, அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பேச்சு வெளிப்படுத்துகிறது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் 50 வருடங்களுக்கு முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுமாறு அப்போதைய அரசாங்கம் கட்டாயப்படுத்தியமை பற்றியும், பகல் உணவுக்கே மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட அனுபவங்களையும் பொதுமக்கள் சிலர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.


பகலுணவே மரவள்ளிக் கிழங்குதான்


சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவி வகித்த 1970 தொடக்கம் முதல் 1977 வரையிலான காலப்பகுதியில், மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டதாக கூறுகிறார் – அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் எம்.ஏ. சலீம்.


அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்டதொரு நாளில் மரவள்ளிக் கிழங்கை மக்கள் சாப்பிட வேண்டும் என்றும், ஹோட்டல்களிலும் சோற்றுக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்குதான் வழங்கப்பட வேண்டுமெனவும் அரசாங்கம் கட்டாயப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கும் ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் சலீம்; அந்த நடைமுறையைப் பின்பற்றாதவர்களை பொலிஸார் கைது செய்ததாகவும் கூறுகின்றார்.


“இரண்டு மரைக்கால் அளவு அரிசிக்கு அதிகமாக கொண்டு செல்பவர்களை அப்போது பொலிஸார் கைது செய்தார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.


“சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் மரவள்ளிக்கிழங்கு ஒரு ‘தூக்கு’ (7.5 கிலோகிராம் எடையுடையது) இரண்டு ரூபா ஐம்பது சதத்துக்கு வாங்கினோம். அரிசி கால் கொத்து 25 சதத்துக்குக் கிடைத்தது. (முக்கால் கொத்து என்பது 01 கிலோவுக்கு சமனானது). மரவள்ளிக்கிழங்கை பகல் உணவாகவும் மக்கள் அப்போது சாப்பிட்டனர்,” என்கிறார் 75 வயதுடைய ரபியுதீன்.


“கிழங்கை அவித்தும், ஒடியல் செய்தும், மாவாக்கி அதில் பிட்டு சுட்டும் சாப்பிட்டோம்” என்றும், அந்தக் கால அனுபவத்தை ரபியுதீன் பகிர்ந்து கொண்டார்.


மக்களின் கோபம் சிறிமாவை தோல்வியடையச் செய்தது


இவ்விடயம் குறித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஏ.எல். அப்துல் றஊப் உடன் பிபிசி தமிழ் பேசியபோது; “அரிசி இல்லை என்பதற்காக மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள் என திடீரெனக் கூறுவது, வேண்டா வெறுப்பானதொரு பேச்சாகும். பொறுப்பு வாய்ந்ததொரு அமைச்சர் அவ்வாறு கூறமுடியாது” என்றார்.


சோற்றுக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கை சாப்பிட வேண்டிய நிலை சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஏற்பட்டமைக்கு, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கும் பொருட்டு, அவர் பின்பற்றிய ‘மூடிய பொருளாதாரக் கொள்கை’யே காரணமாகும் எனவும் குறிப்பிட்டார்.


“உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக சில கொள்கைப் பிரகடனங்களை முன்வைத்தே அப்போது சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தார். அவரின் அந்தக் கொள்கை நல்லது. ஆனாலும் அது வெற்றியளிக்கவில்லை”.


“இலங்கையில் நல்ல வளங்கள் உள்ளன. அவற்றினை சரியான முறையில் பயன்படுத்திப் பயனைப் பெறுவதற்கான நீண்டகாலத் திட்டங்களை எந்தவொரு அரசாங்கமும் இதுவரை மேற்கொள்ளவில்லை”.


“சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் – மூடிய பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கும் கொள்கைத் திட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட போதும், அதனை அமுல்படுத்துவதற்கான வியூகங்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை.


‘எல்லோரும் அரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்’ என்பதற்காகவே, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு இரண்டு மரைக்கால் அளவுக்கு அதிகமான அரசியை கொண்டு செல்வது அப்போது தடைசெய்யப்பட்டிருந்தது.


அப்போது நெல்லை பொதுமக்களிடமிருந்து அரசாங்கமே கொள்வனவு செய்தது. அரிசியை அரசாங்கமே விற்பனை செய்தது. தனியாருக்கு அனுமதியிருக்கவில்லை. தங்கள் சொந்த நெல்லை விற்பனை செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் அப்போது காத்திருந்தனர்”.


“அந்தக் காலப்பகுதியில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. அரிசிக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுமாறு கூறிய அரசாங்கத்தை, அடுத்து வந்த பொதுத் தேர்தலில் மக்கள் படுதோல்வியடையச் சந்தித்தனர். நாடாளுமன்றத்தின் 168 இடங்களில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிறிலங்கா சுந்திரக் கட்சி வெறும் 8 இடங்களை மட்டுமே பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி 18 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது”.


“எங்களிடம் கடந்த வருடம் வரைக்கும் போதுமான நெல் இருந்தது. நெல் உற்பதியில் பாதிப்பு இருக்கவில்லை. அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய எந்தத் தேவையும் இருக்கவில்லை. ஆனால் அரிசிக்கு விலையேறியது. அந்த விலையேற்றத்தின் பயன்கள் விவசாயிகளைச் சென்றடையவில்லை. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிச் சந்தையில் செலுத்தும் ஏகபோகமே அரிசியின் விலையேற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இது அரசாங்கத்தின் பலவீனமாகும்.


நெல்லுக்கு நல்ல விலையைக் கொடுத்து அரசாங்கம் கொள்வனவு செய்யுமாக இருந்தால், தனியாருக்கு தமது நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய தேவை இருக்காது.


இதேபோன்றுதான் தற்போது இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என விவசாயிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கான முறையான எந்தவித நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை” என்றார்.


இதேவேளை அரிசியை இறக்குமதி செய்வதற்கான டொலர் அரசாங்கத்திடம் இல்லை என்றும் பேராசிரியர் ரஊப் குறிப்பிட்டார்.


எது எவ்வாறாயினும் கொரோனா காலத்தில் பல்வேறு துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், நெல் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், கடந்த போகத்தில் நெல் விளைச்சல் அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறினார்.


முறையான திட்டமிடல்களுடன் இலங்கையின் நெல் உற்பத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுமாயின், ஆசியாவில் நெல் உற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடாக மாறும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


நன்றி: பிபிசி தமிழ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »