பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ 2022ஆம் ஆண்டு பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப்படையற்றதாகும். பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என அபயராம விகாரையின் விகாராதிபதி,கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாரஹேன்பிடிய அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஊடாக பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்பட்டதால் 2019ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்கு முழுமையாக ஆதரவு வழங்கினோம்.
அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் தவறானதாக காணப்பட்டன அவற்றை பகிரங்கமாக சுட்டிக்காட்டினோம்.அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்கு உண்டு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் நிர்வாகம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். அரச நிர்வாகத்தில் காணப்பட்ட பல தவறான தீர்மானங்கள் தற்போது
திருத்திக்கொள்ளப்பட்டுள்ளன.எதிர்வரும் நாட்களில் அரச நிர்வாக கட்டமைப்பில் பாரியதொரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.