Our Feeds


Wednesday, January 26, 2022

ShortNews

பொரளை தேவாலய குண்டு விவகாரம்: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த 1000 நாள் நினைவு செப வழிபாடுகளை குழப்ப முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாம்!



(எம்.எப்.எம்.பஸீர்)


வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரமானது, கடந்த ஜனவரி 14 ஆம் திகதி ராகமை – தேவத்தை தேசிய பசிலிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான 1000 நாள் ஞாபகார்த்த அனுஷ்டிப்பு மற்றும் செப வழிபாடுகளை குழப்பும் நடவடிக்கையாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன நேற்று (25) நீதிமன்றில் தெரிவித்தார்.

பொரளை தேவாலய குண்டு மீட்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வேதியர் பிரன்சிஸ் முனீந்ரன் உள்ளிட்ட மூவர் சார்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வாதங்களை முன்வைக்கும்போதே அவர் இதனை வெளிப்படுடுத்தினார்.

அத்துடன் சம்பவம் தொடர்பான உண்மையை கண்டறிவதற்கும், உண்மையான சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் நியாயமானதும் நீதியானதுமான விசாரணை நடத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராயுமாறும், தற்போதைய விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய பங்குத் தந்தை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணைகளை அவசரமாக நிறைவு செய்து நீதிமன்றுக்கு அறிவிக்க நீதிவான் பொலிசாரை பணித்தார்.
பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகார நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நேற்று (25)கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இந்த விடயத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சிசிடி எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சார்பில் அதன் உதவி பொலிச் அத்தியட்சகர் நெவில் டி சில்வா மன்றில் ஆஜராகி மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றை நீதிமன்றுக்கு கையளித்தார்.

இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »