(ஆர்.யசி)
நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவுவதைப் போலவே வெவ்வேறு வைரஸ் காய்ச்சல்கள் பரவுவதாகவும், சகல வைரஸ் காய்ச்சல்களுக்கும் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகள் வெளிப்படுவதன் காரணத்தினால் மருத்துவ ஆலோசனைகளை கண்டிப்பாக பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
டெல்டா வைரஸ் மற்றும் புதிய ஒமிக்ரோன் வைரஸ் பரவல்கள் காரணமாக நாட்டில் அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் கொவிட் -19 வைரஸ் பரவலின் தாக்கம் வெளிப்பட்டு வருகிறது.
ஆகவே கொவிட் -19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும்.
குறிப்பாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதுடன், இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட சகலரும் தமக்கான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசியே ஒமிக்ரோன் வைரஸ் பரவலில் இருந்து எம்மை பாதுகாக்க பிரதான காரணியாக உள்ளது என்றார்.