சர்வதேச நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் தொகுக்கப் பட்ட அண்மைய ஊழல் மதிப்பாய்வு சுட்டி (Corruption Perceptions Index) வெளியிடப்பட் டுள்ளது.
இந்த மதிப்பாய்வு சுட்டியானது உலகெங்கிலு முள்ள 180 நாடுகளின் பொதுத்துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றது. குறித்த மதிப்பாய்வு சுட்டியில், புள்ளி வழங்கப்படும் முறையில் 0 என்பது கூடிய ஊழல் நிலையையும் 100 என்பது ஊழலற்ற தூய்மையான நிலையையும் சுட்டிக்காட்டுகின்றது.
2021ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வு சுட்டியின் பிரகாரம் இலங்கைக்கு வழங்கப்பட் டுள்ள 37 புள்ளிகள், முன்னைய வருடத்தை விட ஒரு புள்ளி குறைவாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தரவரிசையின் அடிப்படையில், 2020ஆம் ஆண்டு 94ஆம் இடத்திலிருந்து இலங்கை, 2021ஆம் ஆண்டு 102ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அதிகபட்சமாக 2012 ஆம் ஆண்டு 40 புள்ளிகளை பெற்றுள்ளமை நினைவுகூரத் தக்கது.
ஊழல் மதிப்பாய்வு சுட்டியில் இலஞ்சம், பொது நிதியின் தவறான பயன்பாடு, ஊழல் தொடர்பான வழக்குகளை திறம்பட விசாரணை செய்யும் தன்மை, போதுமான சட்ட கட்டமைப்புகள், முறைகேடுகளை வெளிப்படுத்துவோர், ஊடகவியலாளர்கள் மற்றும் புலனாய்வாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளின் தன்மை ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், பொறுப்புக்கூறலுக்குத் தேவையான அதிகாரத்தை வைத்திருப்பதற்குத் தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தல், அதிகாரத்தின் மீதான நிறுவனக் கட்டுப்பாடுகளை மீட்டெடுத்து வலுப்படுத்தல், எல்லை கடந்த ஊழல் வடிவங்களை எதிர்த்துப் போராடுதல், அரச செலவீனங்களில் தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை ட்ரான்ஸ் பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் பரிந்துரை செய்கின்றது.
ஊழல், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக வீழ்ச்சி போன்றவற்றின் தொடர் சுழற்சியை எதிர்த்துப் போராடுவதற்காக குறித்த நிறுவனம் மேற்கூறப்பட்ட பரிந்துரைகளை வழங்குகின்றது.