பாகிஸ்தான் – பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
வாகனங்களில் சிக்குண்டே, இந்த 21 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் முர்ரி மலைப் பிரதேசமானது, குளிர் காலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் பிரதேசமாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவு காரணமாக குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் பனிப் பொழிவுடனான வானிலையினால், தமது வாகனங்களில் இருந்த பயணிகளுக்கு, திடீர் முச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட முச்சுத் திணறல் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், பனிப் பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இஸ்லாமாபாத் – முர்ரி நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்கு இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.