கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் விமானத்தில் குடித்து, கும்மாளம் போட்டவர்களை ‘முட்டாள்கள்’ என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் ஒமிக்ரொன் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், புத்தாண்டையொட்டி தனி விமானத்தில் தன் பணியாளர்களை மெக்சிகோ நாட்டுக்கு அழைத்துச் சென்றார். நடுவானில் அவர்கள் குடித்து, புகை பிடித்து கும்மாளமிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு ஆளாயின.
இதையடுத்து கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் கும்மாளமிட்ட கும்பலை திரும்ப அழைத்து வர முடியாது என, விமான நிறுவனம் மறுத்து விட்டது. இதுபோல மேலும் இரு விமான நிறுவனங்கள், அவர்களை கனடாவுக்கு அழைத்து வர மறுத்து விட்டன.
இந்த சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளால் கிறிஸ்மசை கூட குடும்பத்தினருடன் கொண்டாட முடியாமல் மக்கள் தவித்தனர். இந்நிலையில் முகக்கவசம் அணியாமல், விமானத்தில் கட்டுப்பாடின்றி கூத்தடித்தவர்களை முட்டாள்கள் என்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.