Our Feeds


Monday, January 10, 2022

ShortNews

கொழும்பில் ஒரே நாளில் மீட்கப்பட்ட 3 சடலங்கள் - கொலன்னாவையில் மீட்கப்பட்ட சடலம் வெல்லம்பிட்டி நபருடையது!



(எம்.எப்.எம்.பஸீர்)


கொழும்பின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி கடற்கரைகளில் நிர்வாணமான நிலையில் இரு ஆண்களின் சடலங்கள் இன்று ( 10) மீட்கப்பட்டுள்ளதுடன், கொலன்னாவை பெற்றோலிய கூட்டுத் தாபன வளாகத்துக்கு அருகே உள்ள கால்வாயிலிருந்தும் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியை அண்மித்த கடலில், சடலம் ஒன்று மிதப்பதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஷான் டி சில்வா தலைமையிலான குழுவினர் சென்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் நிர்வாணமாக இருந்த நிலையில், ஆள் அடையாளம் எதுவும் உடனடியாக தெரியவில்லை என வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரொஷான் டி சில்வா தெரிவித்தார்.

இதனிடையே பம்பலப்பிட்டி மெரீன் ட்ரைவ் வீதியை ஒட்டிய கடற் கரையில் கரை ஒதுங்கியிருந்த நிலையில் குறித்த நிர்வாணமாக சடலம் மீட்கப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, கொலன்னாவை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை ஒட்டிய கால்வாய் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபர் என்பதனை  உயிரிழந்தவரின் உறவினரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். இந்தச் சடலங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »