Our Feeds


Monday, January 31, 2022

ShortNews

சர்வதிகார அரசாங்கம் தொழிற்சங்கங்களை முடக்க முயற்சி - சஜித் குற்றச்சாட்டு

 

தொழிற்சங்கங்களை முடக்க, இந்த சர்வாதிகார அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, இதற்கமைய தொழிற்சங்கங்களை நசுக்கவும் வேலை நிறுத்தப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது என்று தெரிவித்தார்.

கெக்கிராவையில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், எனவே அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனடியாக முடக்க வேண்டும் என்றார்.

நாட்டின் வளங்களை விற்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்புகளை முன்னெடுப்பதை  ஒடுக்கும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, மக்களுடன் இணைந்து நிற்கும் என்று தெரிவித்தார்.

நாட்டுக்காகக் குரல்கொடுக்க, மக்களுக்காக குரல்கொடுக்க தடையை ஏற்படுத்தும் தற்போதைய ஆட்சியாளர்கள், இந்த நாட்டு மக்களுக்கு, ஜனநாயக உரிமை, ஜனநாயக சுதந்திரம் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

எமது நாட்டின் மின்னுற்பத்தி நிலையங்களை நள்ளிரவில் விற்பார்களாயின் அதற்கு எதிராக குரல்கொடுக்க, தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு உரிமை இல்லையா, தொழிலாளர்களின் குரலை ஒடுக்கவா பார்க்கின்றீர்கள் என கேள்வியெழுப்பினார்.

தொழிற்சங்கவாதிகளின் உரிமைகள் என்பது இந்த நாட்டின் அடிப்படை உரிமைகளாகும். அதனை  மாற்றம்  செய்வார்களாயின் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். என்றார்.

அன்று மக்கள் சுபீட்சத்தின் நோக்கையே வெற்றியடைய செய்ய பாடுபட்டனர். ஆனால் இன்று சுபீட்சத்தின் நோக்கானது, நாட்டு மக்களை பட்டினி போட்டு, நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, நாட்டின் ஏழ்மையை மேம்படுத்தும் நாட்டை அழிக்கும் நோக்காக பரிணமித்துள்ளது என்றும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »