அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை, அந்த சித்தாந்தத்துக்கு அமையவே நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்க்ஷவை பிரதமராக நியமித்தேன்.
அன்றைய சூழ்நிலையில் நான் எடுத்த தீர்மானம் சரியானது என்பதில் இப்போதும் உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த தீர்மானங்கள் மற்றும் ராஜபக்ஷவினருடன் ஏற்படுத்திக் கொண்ட அரசியல் தொடர்புகள் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதானது,
கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்க்ஷவை பிரதமராக நியமிக்க நான் எடுத்த தீர்மானம் சரி என்பதே எனது நிலைப்பாடாகும்.
அந்தத் தீர்மானத்தில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை மற்றும் எனது கொள்கையுடன் அவர்கள் உடன்படாத காரணத்தினால் தான் ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சரவையையும் நீக்கினேன். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்க்ஷவை பிரதமராக நியமித்தேன். இது எனது அரசியல் ரீதியிலான தீர்மானமாகும் என்றார்.