Our Feeds


Saturday, January 8, 2022

SHAHNI RAMEES

கசகஸ்தானில் போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட ஜனாதிபதி உத்தரவு !

 

கசகஸ்தானில் மக்கள் புரட்சி, வன்முறையாக மாறியது. ஜனாதிபதி மாளிகைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நிலைமையை கட்டுப்படுத்த ரஷ்யாவில் இருந்து அமைதிப்படை களமிறக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆசிய நாடுகளில் கசகஸ்தானும் ஒன்று. இது சோவியத் ரஷ்யாவில் இருந்து உடைந்து வந்த நாடு. எண்ணெய் வளமிக்க அந்த நாட்டில் எல்.பி.ஜி. என்று சொல்லப்படுகிற திரவ பெட்ரோலிய வாயுவில்தான் பெரும்பாலான வாகனங்கள் ஓடுகின்றன. இந்த நிலையில், புத்தாண்டையொட்டி எல்.பி.ஜி. விலையை அந்த நாட்டு அரசு இரு மடங்காக உயர்த்தியது.

இது அநியாயம், ஏற்க முடியாது எனக்கூறி விலை உயர்வுக்கு எதிராக அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் புரட்சி வெடித்தது.

வீதிக்கு வந்து மக்கள் போராடினர். அந்த நாட்டின் முக்கிய நகரமான அலமாட்டியில் மக்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. ஒரு கட்டத்தில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு பதவி விலகியது. பொலிஸ் நிலையங்களை போராட்டக்காரர்கள் கையில் எடுத்தனர். அலமாட்டியில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கு போராட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகள் தெரிவித்தன.

கலவரத்தில் 1000இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் வன்முறை பற்றி எரியும் சூழ்நிலையில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாத கும்பல்கள் பிரச்சினையின் பின்னணியில் இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அதில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், போராட்டமும், அது சார்ந்த கலவரமும் தொடந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நிலைமையை கட்டுப்படுத்த ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற 6 முன்னாள் சோவியத் நாடுகளின் உதவியை ஜனாதிபதி ஜோமார்ட் நாடினார். இதையடுத்து இந்த நாடுகளின் கூட்டு அமைப்பான சி.எஸ்.டி.ஓ. கவுன்சில் அமைதிப்படையை கஜகஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், போராட்டக்காரர்களை எந்த வித எச்சரிக்கையும் விடுக்காமல் சுட்டுத்தள்ள பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி ஜோமார்ட் உத்தரவிட்டுள்ளார். இதனால், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தற்போது வரை நடைபெற்ற வன்முறையில் பாதுகாப்பு படையினர் 18 பேரும், போராட்டக்காரர்களில் 26 பேரும் உயிரிழந்துள்ளதாக கசகஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »