Our Feeds


Sunday, January 9, 2022

SHAHNI RAMEES

மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிக்க தயாராக உள்ளோம்

 

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் – மாவத்தகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் எதிர்காலத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர், மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கினால், தேர்தல் நெருங்குகின்றதா? என்று சிலர் கேட்கின்றனர். தேர்தலை எதிர்பார்த்து நாங்கள் திட்டங்களை முன்னெடுக்கவில்லை. மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும்போது நிவாரணப் பொதி கொடுத்தால் அதன்போதும் இவ்வாறான கேள்விகளையே எழுப்புகின்றனர்.

எதிர்க்கட்சிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விரும்பவில்லை. அதற்கும் ஏதோ சொல்கிறார்கள். நாம் வழங்குவதையும் விரும்புவதில்லை.

மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை அறிந்தவுடன் நாம் அது குறித்து ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தீர்மானம் மேற்கொண்டோம். ஆனால் முழு உலகையும் தாக்கியுள்ள கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஒரே இரவில் அகற்ற முடியாது எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »