யேமனிலுள்ள ஹெளதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை தான் இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) தெரிவித்துள்ளது. அதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீதான தாக்குதல் தொடரும் என ஹெளதி இயக்கம் கூறியுள்ளது.
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசன் ஹேர்ஸோக், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு முதல் தடவையாக விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் வசிக்காத பகுதியொன்றில் ஏஏவணை சிதைவுகள் வீழ்ந்ததாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சு இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வான் போக்குவரத்துகள் வழமை போன்று நடைபெறுவதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியை நோக்கி பல ஏவுகணைகளை தான் ஏவியதாகவும் துபாயை நோக்கி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவியதாகவும் யேமனின் ஹெளதி இயக்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள, சர்வதேச நிறுவனங்களின் தலைமையகங்கள் எதிர்வரும் காலத்தில் இலக்கு வைக்கப்படும் என ஹெளதி இயக்கத்தின் பேச்சாளர் யெஹ்யா சரியா தொலைக்காட்சி உரை யொன்றில் தெரிவித்துள்ளார்.
ஹெளதி இயக்கத்துக்கு எதிரான போரில் யேமன் அரசாங்கத்துக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு இராச்சியமும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.