ஹட்டன் − அக்கரப்பத்தனை நகரத்திலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அக்கரப்பத்தனை நகரத்தில் இதுவரை காலமாக ஆலயம் ஒன்று இல்லாத நிலையில், புதிதாக புனரமைக்கப்பட்ட குறித்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலேயே இவ்வாறு சிலைகள் மற்றும் விக்கிரங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆலயத்தில் இம்மாதம் 19ம் திகதி முதல் 23ம் திகதி வரை கும்பாபிஷேகமும் இடம்பெற ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதை அடுத்து, அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலவி வருகின்றது.
அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்களும் அனைத்து கடைகளையும் மூடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.