Our Feeds


Friday, January 28, 2022

ShortNews

மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு - VIDEO



இஸ்லாத்தை விட்டும் ஒருவர் வெளியேறிச் சென்றால், அவரை கொலை செய்ய வேண்டும் என – இஸ்லாம் ஒரு போதும் கட்டளையிடவில்லை என்பதுடன், உண்மையில் உலமா சபை அப்படியொரு பத்வாவை வழங்கியிருந்தால், அது அன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய போதிய தெளிவின்மையினால் வழங்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.


நேற்று (27) செயலணியின் அலுவலகத்துக்கு சமூகமளித்து, ரஸ்மின் வழங்கிய சாட்சியத்தில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.


மேலும்,மௌலவி ரஸ்மின் வழங்கிய சாட்சியத்தில்;


ஷரீஆ சட்டம் என்றால் என்ன? மாற்று மதத்தினரை கண்ட இடத்தில் கொலை செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகிறதா? அதன் விளக்கம் என்ன? என்பவை தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.


“இஸ்லாம் கூறும் ஜிஹாத் என்பது, ஒரு அரசாங்கம் தனது நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு செய்யும் யுத்தமே தவிர தனித்தனிக் குழுக்கள் செய்யும் தாக்குதல் ஜிஹாத் அல்ல அது தீவிரவாதம் அதனை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை” என, இதன்போது அவர் கூறியதோடு, இதற்கான விளக்கத்தினை வழங்கியிருந்தார்.


அத்துடன், உலமா சபையினால் காத்தான்குடி அப்துர் ரவூப் என்பவருக்கு எதிராக ‘மதம் மாறியவர்களை கொல்ல வேண்டும்’ என கடந்த காலத்தில் வழங்கியதாக கூறப்பட்ட சர்சைக்குறிய ‘பத்வா’ (தீர்ப்பு) தொடர்பில் சாட்சியமளித்ததோடு, அதற்கான விளக்கத்தினையும் இதன்போது வழங்கினார்.


இஸ்லாமிய மதத்தை விட்டும் ஒருவர் வெளியேறிச் சென்றால் அவரை கொலை செய்ய வேண்டும் என இஸ்லாம் ஒரு போதும் கட்டளையிடவில்லை என்பதுடன் உண்மையில் உலமா சபை அப்படியொரு பத்வாவை வழங்கியிருந்தால் அது அன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய போதிய தெளிவின்மையினால் வழங்கப்பட்ட ஒன்றாக இருக்கும் எனவும், தனது சாட்சியத்தில் ரஸ்மின் குறிப்பிட்டார்.


“இஸ்லாத்திலிருந்து மதம் மாறியவர்களை கொலை செய்ய வேண்டும் என்று குர்ஆன் ஒரு போதும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இஸ்லாத்தை ஏற்று நபிக்கு முன்னால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் சென்றவர்களைக் கூட, நபியவர்கள் கொலை செய்யவில்லை. மதம் மாறியவர்களுக்கு உலகில் எவ்விதமான தண்டனைகளையும் இஸ்லாம் கூறவில்லை” எனவும், இதன்போது ரஸ்மின் குறிப்பிட்டார்.


இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் எனக் கூறுவது, இஸ்லாத்தின் போதனைகளை தவறாகப் புரிந்து கொண்டமையினால் ஏற்பட்ட பிரச்சினை எனவும், தனது சாட்சியத்தில் ரஸ்மின் தெரிவித்தார்.


இதுவேளை, முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முஸ்லிம்களின் மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கானது என்பதினால் அதில் சில திருத்தங்கள் – குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனத் தெரிவித்த ரஸ்மின்; “முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக இல்லாமலாக்கக் கூடாது” என, வலியுறுத்தியதோடு, அதற்கான நியாயங்களையும் எடுத்துக் கூறியதுடன், செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளையும் செயலணியிடம் ஒப்படைத்தார்.


மேலும், பயங்கரவாதி ஸஹ்ரானின் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், பல தடவை பாதுகாப்பு தரப்பினருக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கியும் தாக்குதல் தடுக்கப்படவில்லை என்பதை செயலணியிடம் கூறிய ரஸ்மின்; முக்கிய சூத்திரதாரி நௌபர் என்பவரைக் கைது செய்யுங்கள் என, பொலிஸ் தலைமையகத்தில் தாம் செய்த முறைப்பாட்டின் ஆதாரங்களையும் செயலணியிடம் சமர்பித்தார்.


இதன் போது சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் பிரதியொன்றினையும் செயலணியினரிடம் மௌலவி ரஸ்மின் கையளித்தார். 


நன்றி: புதிது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »